தமிழ்நாடு

கனிஷ்க் நகைக்கடை உரிமையாளர் கைது

கனிஷ்க் நகைக்கடை உரிமையாளர் கைது

rajakannan

எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் கனிஷ்க் நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 824 கோடியே 15 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் செய்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு 14 வங்கிகளை உள்ளடக்கிய பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பு புகார் மனு அனுப்பியது.  இது தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ இணை இயக்குநருக்கு பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் 16 பக்க புகார் கடிதத்தை அனுப்பினார்.  

அதிகபட்சமாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 175 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கனிஷ்க் நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்பரேஷன் பாங்க், பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 14 வங்கிகளில் கடன் பெற்று அசல் மற்றும் வட்டியை கனிஷ்க் நிறுவனம் பாக்கி வைத்துள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. மொத்தமாக 824 கோடியே 15 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்தப் புகார் தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுக்காவில் உள்ள நடராஜபுரம் மற்றும் புக்காத்துறை கிராமங்களில் கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. 

இந்நிலையில், வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் பூபேஷ் குமார் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பூபேஷ்குமார் ஜெயினை ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் பூபேஷ் குமார் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக வருமானம் ஈட்டுவதாக கூறிதான் அவர் வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். வருமானம் ஈட்டியதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்து இருந்தார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத்துறையினர் மோசடி நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.