கனிமொழி web
தமிழ்நாடு

“5,300 ஆண்டுக்கு முன்பே தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாடு.. மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்?” - கனிமொழி

“தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக நினைத்தால், அவர்கள்தான் விலக்கப்படுவார்கள்” என மக்களவையில் கனிமொழி எம்.பி. கூறினார்.

Rishan Vengai

தமிழகத்தில் இரும்பு பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற கண்டுபிடிப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று பேசிய அவர், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக நினைத்தால், அவர்கள்தான் விலக்கப்படுவார்கள் என விமர்சித்தார்.

5300 ஆண்டுக்கு முன்பே தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாடு..

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை, மிரட்டப்படுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன, அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் 'Anti Indian' என்கிறார்கள்” என மத்திய அரசை விமர்சித்து பேசினார்.

மேலும் தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாடு குறித்து பேசிய அவர், “இந்தியாவின் வரலாறு 3,500 ஆண்டுகள் முன் வேத காலத்தில் தொடங்கியதாக நீங்கள் கூறலாம். ஆனால் இந்தியாவில் இரும்பு காலம் 5,345 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதற்கான சான்று, தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக பழமையான காலம் என்ற கண்டுபிடிப்பை பற்றி மத்திய அரசு இதுவரை கருத்து கூறவில்லை. இந்த உண்மையை புறக்கணிக்க நினைத்தால், திராவிட நாகரீகத்தில் இருந்து நீங்கள் விலக்கி
வைக்கப்படுவீர்கள்
” என கூறினார்.