திமுக கொடுத்த அழுத்தத்தினால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது எனவும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பது தான் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. திமுக கொடுத்த அழுத்தத்தினால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக எப்போதுமே தேர்தலுக்கு தயாராக இருக்கிறது.
பாஜக- சிவசேனா இடையே பல பிரச்னைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியை அமைக்க முடியாத அளவுக்கு பல குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதாக சொன்னார்கள். ஆனால் எந்த முதலீட்டை ஈர்த்து வந்தார்கள் என்று தெரியவில்லை. இதுவரை எந்த தொழில்நுட்பமும் வரவில்லை. மக்களின் செலவில் அவர்கள் வெளிநாடு சுற்றி பார்த்ததாக இருக்கட்டும். வாழ்த்துகள்.
கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக, தெளிவாக எடுக்க வேண்டும் என்பதற்காக சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதை அரசியல் காரணங்களுக்காக, புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு” என்றார்.