திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி சந்தித்துப் பேசியிருப்பதாக கூறப்படும் நிலையில், 2029 மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய அளவில் 3-வது அணியை கட்டமைக்க முயற்சி நடந்து வருதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து முதலாவதாக விலகிய காங்கிரஸ், தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்ததுடன் அமைச்சரவையிலும் பங்கேற்றிருக்கிறது. இதனால், இவ்விரு கட்சிகளுக்கிடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்ட நிலையில், இண்டியா கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்து அங்கம் வகித்து வந்த திமுக அந்தக் கூட்டணியில் தொடர முடியாது என அறிவித்து விட்டது. மேலும் சமீபத்தில் காங்கிரஸ் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் திமுக தலைவர்கள் புறக்கணிப்பு செய்திருந்தனர்.
கடந்த 3 மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்தக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து 2023-ம் ஆண்டு இண்டியா கூட்டணியை கட்டமைத்திருந்தன. மேலும், 2019 தேர்தலின் போது முதன்முதலாக ராகுல்காந்தியை பிரதமர் முகமாக முன்மொழிந்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இவ்வாறு, காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான கட்சிகளில் ஒன்றாக இருந்த திமுக அக்கூட்டணியில் விலகிய நிலையில், அடுத்தக்கட்ட முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜக கூட்டணியுடன் திமுக இணைய வாய்ப்பிருக்கிறது எனவும் பேசப்பட்டது.
இந்தச்சூழலில் தான், தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் டெல்லி அரசியலிலும் தீவிரமாக திமுக கவனம் செலுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கும் மற்றா எதிர்க் கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவில் 3-வது கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவருகின்றனர். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி சந்தித்துப் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர், உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்து பேசி இருந்ததும் முக்கியமாக பார்க்கப்பட்டது. இவ்வாறு, பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்க திமுக முயற்சி என பேசப்படும் நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியமானதாக பார்க்கின்றனர். அதே சூழ்நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்தும், தேசிய அளவிலான தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்கள் குறித்தும்இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படுவதாக தகவல் கூறுகின்றன.