தமிழ்நாடு

டாக்டர் ஆக வேண்டும் என்பது கனவு; நீட் எனது மகள் வாழ்வை அழித்துவிட்டது - கனிமொழியின் தந்தை

கலிலுல்லா

''கனிமொழியை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பது எனது கனவு. அவளும் அதையே கனவாக கொண்டிருந்தாள். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது'' என்று மாணவி கனிமொழியின் தந்தை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதியுள்ளார். இருந்தபோதிலும், தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கனிமொழியின் தந்தை கருணாநிதி கூறுகையில் ''எனக்கு இரண்டு மகள்கள். முதல் பெண் கயல்விழி. நர்ஸிங் படித்து வருகிறார். இரண்டாவது பெண் கனிமொழி. 12ம் வகுப்பு தேர்வில் 93% மதிப்பெண் பெற்றிருந்தார். அவருக்கு டாக்டர் ஆவது பெரும்கனவாக இருந்தது. நீட் தேர்வு எழுதிவிட்டு வந்தபின், கவலையுடனே இருந்தார். இயற்பியல், வேதியியல் பாடங்கள் கடினமாக இருந்தது என்றார்.

நான் என் மனைவியை அழைக்க வெளியே சென்றுவிட்டேன். கனிமொழி வீட்டிலேயே தனியாக இருந்தார். வீட்டிற்கு வந்து பார்க்கும்போது தற்கொலை செய்துகொண்டார். எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவி. 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தார். நீட் தான் கனிமொழியின் வாழ்க்கையை பறித்துவிட்டது. என் குழந்தை டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சிய கனவு; அவளும் அதையே கனவு கண்டாள். இறுதியில் எல்லாமே முடிந்துவிட்டது'' என்றார். 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)