திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி புதரில் வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலைசெய்துவரும் வடமாநிலத்தவரின் 3 வயது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இக்குற்றச்சம்பவம் தொடர்பாக 19 வயது வடமாநில இளைஞர் கைதுசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் பெற்றோரை மட்டுமில்லாமல் மொத்தமாக அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, “கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.