தமிழ்நாடு

கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் இதுதான்..! - கனிமொழி ஆவேசம்

கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் இதுதான்..! - கனிமொழி ஆவேசம்

webteam

விஜய்சேதுபதி மகளுக்கு மர்ம நபர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்ததற்கு திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர்வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.

பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.