தமிழ்நாடு

அமித்ஷாவின் முயற்சி வெற்றி பெறாது-கனிமொழி

jagadeesh

ஒரே நாடு, ஒரே மொழி அதுவும் ஹிந்தி தான் என அமித்ஷா கூறியதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் பகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி " பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய விதமாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு குழந்தைகளின் மன நிலையை அறியாமல் அவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய வகையில் இது போன்ற கல்விச் சட்டத்தை இயற்றியுள்ளது.  ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று ஒற்றை பரிணாமத்திற்குள் கொண்டு வரக்கூடிய எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறாது ” எனக் கூறினார்.

மேலும் தொடர்ந்த கனிமொழி "இந்தி மொழி திணிப்பை திராவிட முன்னேற்ற கழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.