தமிழ்நாடு

தண்ணீருக்காக 4 கி.மீ நடந்து செல்லும் இருளர் பெண்கள்

webteam

செங்கல்பட்டு அருகேயுள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் 4 கி.மீ நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அரும்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட சீத்தாவரத்தின் பாலாற்றங்கரையை ஒட்டி இருளர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 60 ஆண்டுகளாக இருளர் குடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆழ்துளை பம்பு மற்றும் சிறு மின்விசை மோட்டார்கள் மூலம், மக்கள் குடிநீர் பெற்று வந்தனர். இந்நிலையில் பம்பு மற்றும் மோட்டார் ஆகிய இரண்டுமே பழுதடைந்துவிட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழவேரி கிராமத்திற்குச் சென்று குடிக்க தண்ணீர் எடுத்து வருகின்றன‌ர். இவ்வாறு 4 கி.மீ சென்று தண்ணீர் கொண்டு வருவதால் கால் வலி ஏற்படுவதாகவும், வீட்டில் உள்ள குழந்தைகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அத்துடன் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.