தேர்தல் பிரசாரத்திற்காக காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சாலையோரங்களில் பேனர்கள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்-அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சாலையோரங்களில் பேனர்கள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதேபோல சாலை ஓரங்களில் சுமார் 100 அடி உயரத்திற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கட்- அவுட் வைக்கப்பட்டது. வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை சாலைகளில் இருபுறமும் உள்ள மின்கம்பங்களை ஆக்கிரமித்து விதிகளை மீறி அதிமுகவினர் பேனர்களை கட்டி வைத்தனர்.
உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ள வெங்கச்சேரியில் முதல்வரை வரவேற்கும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு சுமார் 100 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்-அவுட் முதல்வர் பார்வைக்கு தெரிய வேண்டும் என்பதால் சாலையில் இருந்த வேப்ப மரத்தை கட்சித் தொண்டர் வெட்டினார். இது குறித்த வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பேனர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டுமென்று பொதுமக்கள் தெரிவித்தனர்.