தமிழ்நாடு

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் மரணம்:கொலையா? தற்கொலையா?

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் மரணம்:கொலையா? தற்கொலையா?

webteam

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் மரணத்தில் மர்மம் தொடர்ந்து வருகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில் முறையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகே இது கொலையா? தற்கொலையா என்பது உறுதி செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கம்போடியாவில் ஸ்ரீதர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஆகவே ஸ்ரீதரின் கூட்டாளிகளிடமும் அவரால் பாதிக்கப்பட்டவர்களிடமும்‌ விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே ஸ்ரீதரின் கூட்டாளிகள் 10 பேரை காஞ்சிபுரம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கம்போடியாவில் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதையடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை ஏற்பாடாக காஞ்சிபுரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கம்போடியாவிலுள்ள ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, கடத்தல் என 45க்கும் அதிகமான வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீதர் இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தார். 150 கோடி மதிப்பிலான அவருடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்நிலையில் கம்போடியாவில் மரணமடைந்த ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.