students
students pt desk
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: 1-5 ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டே அறை... ஒரே ஆசிரியர்! அவல நிலையில் அரசுப்பள்ளி

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் என்ற பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கட்டியாம்பந்தல் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார்.

கட்டியாம்பந்தல் தொடக்கப்பள்ளி - School

இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ள இந்த பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை ஒரு அறையிலும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒரு அறையிலும் பாடம் கற்று வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் தலைமையாசிரியரை மட்டுமே கொண்டு இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கற்கும் திறன் பெரிதும் பாதித்திருப்பதாகவும், ஆரம்பக் கல்வியை சரியாக மாணவர்களுக்கு அளிக்காததால் மேல் வகுப்புக்கு செல்லும்போது மாணவர்கள் கற்றல் திறனில் குறைபாடு ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கட்டியாம்பந்தல் தொடக்கப்பள்ளி - School Students

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச் செல்வியை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “ஏற்கெனவே அந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் கொடுத்திருக்கிறோம். இப்புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி ஆய்வு மேற்கொள்வோம். உண்மையெனில் அங்கு மீண்டும் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவர்” என உறுதியளித்தார்.