தமிழ்நாடு

கொரோனா பீதியிலும் பரமபதம்..! - ட்ரோன் கேமராவை பார்த்து அலறி ஓடிய கும்பல்..!

கொரோனா பீதியிலும் பரமபதம்..! - ட்ரோன் கேமராவை பார்த்து அலறி ஓடிய கும்பல்..!

webteam

காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியில் பரமபதம் விளையாடிய கும்பல் போலீஸாரின் ட்ரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வந்த பகுதியைக் கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து 9-வார்டு உள்ளடக்கிய 65 தெருக்கள் அனைத்தும் இரும்பு தகரத்தால் சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் தடுப்பு வேலியை தாண்டி வெளியே வரக்கூடாது எனவும், வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் காவல்துறையினர் சார்பாக கட்டுப்பாட்டு மண்டலம் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆள் நடமாட்டம் எதுவும் இருக்கிறதா என கண்காணிக்கப்பட்டது. அப்போது ட்ரோன் கேமராவில் அப்பகுதி இளைஞர்கள் சாலையின் நடுவே கும்பலாக அமர்ந்து பரமபதம் விளையாடியது தெரிந்தது. அவர்களை நோக்கி ட்ரோன் கேமரா செலுத்தப்படுவதை அறிந்த இளைஞர்கள் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை வீட்டில் விடும் வரை தொடர்ச்சியாக ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் விரட்டினர். இந்த வீடியோவை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருக்கும் யாரும் அஜாக்கிரையாக நினைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.