காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டு வந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் முறையாக மின்வாரியம் பராமரிக்கப்படாததால்தான் இந்த மின்வெட்டு ஏற்படுகிறது, ஒரு மாதத்திற்கு பிறகு மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
அமைச்சர் சொன்னதுபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்வெட்டு இல்லை என்றாலும் உத்திரமேரூர் பகுதியில் மட்டும் தொடர்ந்து பல மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அமைச்சர் உத்தரவிட்டதுபோல எந்த பராமரிப்பு பணிகளையும் உத்திரமேரூர் மின்வாரிய அதிகாரிகள் செய்யவில்லை என்றும் அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.
உத்திரமேரூர் காவல் நிலையம் அருகேயுள்ள திரவுபதி அம்மன் ஆலைய வளாகத்தில் உள்ள மின் கம்பங்கள் புதர்கள் மண்டி மின் வயர்களில் செடிகள் படர்ந்து காணப்படுகிறது. உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் உடைந்து காணப்படுகிறது என்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வெட்டு தொடர்ந்து ஏற்படுகிறது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வுசெய்து மின்தடை நீங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.