ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 35 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயகொளத்தூர் பகுதியில் சுதர்சனம் என்பவர் தனது மனைவி ஜானகி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். ஹூண்டாய் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், வழக்கம் போல் இன்று பணிக்கு சென்றுவிட இவரது மனைவி ஜானகி, பக்கத்து வீட்டின் துக்க நிகழ்வுக்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஜானகி வீடு திரும்பி கதவை திறந்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 35 சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஜானகி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சோதனை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களை எடுத்துச் சென்றனர்.
பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.