செய்தியாளர்: இஸ்மாயில்
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷன், செங்கல்பட்டு மாவட்டம் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி டேட்டா சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள சக மாணவர்களுடன் ஊர் சுற்றிப் பார்க்க நேற்று வந்துள்ளார். இதையடுத்து பல்வேறு கோயில்களை சுற்றிப் பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து உணவு அருந்திவிட்டு தனது நண்பர்களுடன் காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை ஏரியை சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளனர்.
இதையடுத்து ஏரிக்கரையை சுற்றி பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சக நண்பரின் காலணி ஏரியில் விழுந்துள்ளது இதனைக் கண்ட லட்ஷன் தனக்கு நீச்சல் தெரியும் என்றும் தான் காலணிபை எடுத்து வருகிறேன் என்று சொல்லியபடி ஏரியில் இறங்கியுள்ளார். காலணியை எடுக்கச் சென்ற லக்ஷன் ஏரியில் நீந்த முடியாமல் மூச்சுத் திணறி நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட சக மாணவர்கள் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி மாயமான மாணவர் லடஷன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.