தமிழ்நாடு

அவமானத்தால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவர்

அவமானத்தால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவர்

webteam

காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவரை வகுப்பிற்கு வெளியே நிற்கச்சொன்னதால், மாணவர் 3வது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பஞ்சுபேட்டை தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ரகு. இவர் இன்று பள்ளியின் 3வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவரை, அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவர் ஏன் குதித்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக பேசிய மாணவரின் தந்தை முருகன், “எனது மகன் காலதாமதமாக பள்ளிக்கு சென்ற இருக்கிறான். அதனால் வகுப்பிற்கு வெளியே நிற்குமாறு ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார். இதனால் சக மாணவர்களின் கேலி பேச்சுக்கு ஆளான என் மகன், அவமானம் அடைந்துள்ளான். அந்த அவமானம் தாங்க முடியாமல், பள்ளியின் மூன்றாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளான். இந்தத் தகவலை பள்ளி நிர்வாகம் ஒரு மணி நேரமாக என்னிடம் மறைத்துவிட்டனர்” என்று குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்தத் தகவல்களை ரகுவுடன் படிக்கும் அவரது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார். 

ஆனால், இதுகுறித்து கூறிய பள்ளியின் நிறுவனர் சஞ்சிவி, “பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக மாணவர் வந்தது காலையில். ஆனால் இச்சம்பவம் நடைபெற்றது மாலையில். எனவே என்ன காரணம்? என்று இனிமேல்தான் விசாரணை செய்ய வேண்டும். மாணவர் குதித்த தகவல் குறித்து உடனடியாக பெற்றோரிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் எனக் கூறவில்லை. அதனால் மாணவனின் பெற்றோர் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு தவறாக சென்று விட்டார்கள். இச்சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் முறையாக விசாரணை செய்யப்படும்” என்றார். 

அவமானம், கேலி என்பதெல்லாம் நம் வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய அர்த்தமற்ற நிகழ்வுகள். அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு சாதித்துக்காட்ட வேண்டும். தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)