தமிழ்நாடு

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி. காமகோடி நியமனம்

JustinDurai

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சக்தி' மைக்ரோபிராசஸரை வடிவமைத்த வி. காமகோடி சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியின் இயக்குநராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியின் இரண்டாண்டு பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி சென்னை ஐஐடியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றி வரும் காமகோடி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சக்தி என்ற நுண்செயலியை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் காமகோடி. பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் காமகோடி மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திலும் உறுப்பினராக உள்ளார். காமகோடியின் சேவை மூலமாக சென்னை ஐஐடியும் நாடும் பெருமளவு பயன்பெறும் என தற்போதைய இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை நோக்கத்தின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை அதிகரிப்பதே தம்முடைய உடனடி குறிக்கோள் என ஐஐடியின் புதிய இயக்குநராக பதவியேற்கவுள்ள காமகோடி கூறியுள்ளார்.