தமிழ்நாடு

தமிழகத்திற்கு சிறப்புச் சேர்த்த பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று..!

Rasus

தமிழகத்தின் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று. தன்னலம் கருதாது மக்கள் நலம் பேணிய மகத்தான தலைவனின் சிறப்புகள் சிலவற்றை நினைவு கூர்வோம்.

‘அறிவினாற் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக்கடை’ என்ற வள்ளுவப் பேராசானின் வாய்மொழிக்கு உதாரணமாய் வாழ்ந்த மாமனிதர் காமராஜர். தமிழகத்திற்கு கல்விக் கண் தந்த பேராசான் அவர். இடைநிலைக் கல்வியைக் கூட எட்டாமல் நின்ற அம்மனிதன்தான், மாணவன் யாரும் வறுமையால் இடை நிற்றல் கூடாது என்று மதிய உணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை உருவாக்கினா‌ர். செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புணர்ந்த காமராஜர், அறிவியல் தொழில் நுட்பப் பாடப்புத்தகங்களும் தமிழ் மொழியில் வெளிவரச் செய்த பெருமைக்குரியவர்.

1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவனாக இன்றளவும் போற்றப்படுகின்ற, இந்தியாவின் தலைவர்களை எளிதில் கண்டெடுத்த அந்த அற்புதத் தலைவர் பிறந்தார். 12 வயது வரை கல்விச்சாலை சென்ற அவர், அதன் பின் பணிசெய்யலானார். சுதந்தரத் தீ நாடெங்கும் பற்றி எரிந்த நேரத்தில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அறிவிப்பின்பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டரானார். போராட்டக் களம் பல கண்டார். சிறையும் சென்றார். எட்டாண்டுகள் சிறைவாசம் முடித்து வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவரானார். 1940 தொடங்கி 14ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்த காமராஜர், 1954 தமிழ்த்திருநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றார். எட்டு பேரைக் கொண்ட சின்னஞ்சிறிய அமைச்சரவை கொண்டு இம்மாநிலத்தில் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஆழியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் பல கட்டி, பாசன வசதி செய்து விவசாயம் செழிக்கச் செய்தார். உழவுக்கு உரியவை செய்த அவர், என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை கொண்டு தந்ததன் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார். அவர் செய்ததில் மிக முக்கியப் பணியாக இன்றளவும் கருதப்படுவது, தமிழகத்தில் கல்விக் கண் திறக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளே.

மாநிலம் முழுவதும் அவர் புதிய பள்ளிக்கூடங்களை கட்ட நடவடிக்கை எடுத்ததோடு, ஏற்கெனவே இருந்த பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றின் தரத்தை உயர்த்தவும் அரும்பாடுபட்டார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு‌ தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது அவரது முக்கியக் கொள்கையாக இருந்தது. பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் உறுதி செய்தார் காமராஜர். பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக சீருடைத் திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு, மகத்தான மதிய உணவுத்திட்டத்தின் மூலம் ஏழைச் சிறுவனின் வயிறு நிறைத்து வாட்டம் போக்கினார்.

வகுத்திட்ட கொள்கைகள் பால் வாழ்ந்து, காலமெல்லாம் மக்களின் நலன் சார்ந்த கனவு கண்ட அந்தப் பெருந்தலைவன் நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு லால் பகதூர் சாஸ்திரி, அதன் பின்னர் இந்திரா காந்தி ஆகிய இருவரைக் கொண்டு வந்து கிங்மேக்கர் என்ற அடைமொழியைப் பெற்றவர். காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றிய அந்த மாபெரும் தலைவர் 1975-ஆம் ஆண்டு தன்னை ஆட்கொண்ட தலைவனின் பிறந்த நாளையே தனது நினைவு நாளாக்கிச் சென்றார்.

தாய்த்திருநாட்டின் மேன்மைக்கு உழைத்த அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி பெருமை கொண்டனர். தமிழகத்தின் கல்விக்கண் திறந்த அவருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை தேடிக் கொண்டது தமிழக அரசு. குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய் சுற்றும் உலகு. நேர்மையாய் அறநெறி பிறழாமல் நற்செயல்கள் மூலம் மேன்மை அடையும் ஒருவனை உலகத்து மக்கள் அனைவரும் உறவாய்க் கொள்வர் என்பதே அய்யனின் வாய்மொழி. அதன் இலக்கணமாய் வாழ்ந்தவரே இனிய தலைவர் காமராஜர்