கிராம சபைக் கூட்டம் ரத்து என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை.
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், குடியரசுத் தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதும் நடத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி கிராம சபைக்கூட்டங்களை நடத்த வேண்டாம் எனவும், அனைத்து ஊராட்சிகளுக்கும் முறைப்படி தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.