தமிழ்நாடு

நெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்

நெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்

webteam

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு, வழக்கமாக வசூலிக்கப்படும் அபராதத்தை விட அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன் அதிக அபராதம் வசூலித்த கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

இந்தப் போராட்டத்தின்போது, தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து அங்கு தற்காப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவலர்கள் குவிக்கப்பட்ட பின்னரும், மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. 

இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டுள்ள ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.