அரசியலில் வெல்ல பெயர், புகழ் மட்டும் போதாது, அதற்கு மேல் என்ன வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியும் என சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளான இன்று, அவரது மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், ’தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பது நிறைய தருணங்களில் நிரூபணமாகியுள்ளது. நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தை திறக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. நடிப்பில், வசன உச்சரிப்பில், நடை, உடை பாவனைகளில் ஒரு புரட்சியை உருவாக்கியவர் சிவாஜி. தன் நடிப்பாற்றலை நம்பி உச்சத்தை அடைந்தவர்.
சிவாஜி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது அவருக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. அந்த தொகுதிக்கு ஏற்பட்ட அவமானம். அரசியலில் வெல்ல பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு மேல் எதோ ஒன்று வேண்டும். அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும். அது எனக்கு தெரியாது. கமல்ஹாசனுக்கு தெரியும் என நினைக்கிறேன். அதை தற்போது கேட்டால் கமல் கூறமாட்டார். ஒருவேளை இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கூறியிருப்பாரோ என்னவோ?’ என்றார்.