கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், “கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள். வரவேற்பேன். புத்தரும், கலாமும் ஒன்றுதான். நாம்தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது. கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி.
முதல்வரானால் நான் நேர்மையாக இருப்பேன். யார் முதல்வராக வந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். முதல்வரானவுடன் முதல் கையெழுத்து என்பது குறுகியகால விஷயம். நான் நீண்டகால தீர்வு சொல்கிறேன். விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள். முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.