தமிழ்நாடு

தமிழன் என்ற வகையில் கருத்து...கமல்ஹாசன்

தமிழன் என்ற வகையில் கருத்து...கமல்ஹாசன்

webteam

தமிழன் என்ற வகையிலேயே ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கருத்துகளை தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா எம்பி சுப்பிரமணியன் சுவாமியும், நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டர் தளத்தில் வார்த்தைப் போர் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று விரிவாக‌ப் பேட்டியளித்திருந்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் விமர்சித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி, சினிமாகாரரான கமல்ஹாசன் போராட்டக்காரர்களை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்திருக்க வேண்டும் எனச் சொல்வது அறிவீனமானது என விமர்சித்திருந்தார். மதுரையில் அந்த முயற்சியை முதல்வர் எடுத்த போது என்ன நேர்ந்தது என்றும் சுவாமி கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் தளத்தில் எதிர்வினை ஆற்றியுள்ள நடிகர் கமல்ஹாசன், சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், தாம் ஒரு தமிழன் என்ற வகையிலேயே ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காமராஜர், அண்ணா, ராஜாஜி மற்றும் தமது தந்தை போன்றவர்களும் கூட சுப்பிரமணியன் சுவாமி இழிவாக குறிப்பிட்டிருக்கும் தமிழர்கள் தான் எனவும் கமல்ஹாசன் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.