சம்பளம் வழங்காததை தெரிவித்த கவுதமி, பின்னர் சம்பளம் வழங்கப்பட்டதை கூறவில்லையா? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த பிப்ரவரி மாதம் கவுதமி வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “ கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த நேரத்தில் அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. எனது வாழ்க்கையை நிர்மாணிக்க, நிலுவையில் உள்ள சம்பள பாக்கிதான் ஆதாரமாக உள்ளது. பல முறை கமல்ஹாசனிடமும், அவரது நிறுவனத்திடமிருந்தும் அதைக் கேட்டுப்பெற முயற்சித்தேன். ஆனால் இன்னும் சம்பள பாக்கி வரவில்லை” என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கமல், “கவுதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட்டோம். சம்பளம் வழங்காததை தெரிவித்த கவுதமி, வழங்கியதை கூறவில்லையா?
” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள குடியாது என்றும், சுற்றுசூழலுக்கு பாதிப்பு வரும் விஷயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். மக்களில் நானும் ஒருவன் என்பதால், நானும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அவர் கூறினார்.