தமிழ்நாடு

“சாதிப் பிணி ஒழிய குரல் கொடுப்போம்” - கமல்ஹாசன் காட்டம்

“சாதிப் பிணி ஒழிய குரல் கொடுப்போம்” - கமல்ஹாசன் காட்டம்

webteam

கும்மிடிப்பூண்டியில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரை கொடியேற்ற விடமால் தடுத்த நிகழ்வுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல். சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற ‌தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த அமிர்தம் என்ற பெண்ணை, சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அரிதாஸ் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமிர்தம் தடுக்கப்பட்டதாக வந்த செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

சம்பவம் குறித்து ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர், 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஊராட்சித் தலைவர் ஹரிதாஸ், ஊராட்சி அலுவலக செயலாளர் சசிகுமார் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்க ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.