தமிழ்நாடு

"இனி மக்களே தீர்ப்பு வழங்க வேண்டும்" - டாஸ்மாக் குறித்து கமல்ஹாசன்

jagadeesh

மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு மக்களே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொது முடக்கத்திற்கு இடையே அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின்படி, சென்னையைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் டாஸ்மாக் மதுவிற்பனைக்கு உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் "உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்குத் தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது" எனத் தெரிவித்துள்ளார்.