இறுதி ஊர்வலத்தில் தான் பங்கேற்பதில்லையே தவிர, இறுதிச் சடங்கில் பங்கேற்பேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வரவுள்ளதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் மும்பை சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கமல், “உயிர்ழந்த ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கிறேன். இறுதி ஊர்வலத்தின் கலந்துகொள்வது வழக்கமில்லை என்று முடிவெடுத்த நிலையில், குடும்பத்தில் ஒருவராகக் கருதும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செல்கிறேன். பொதுமக்களுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதால், இடையூறுகள் ஏற்படும் என அதை தவிர்க்கிறேன்” என்று கூறினார்.
கடந்த 21ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், ராமநாதபுரத்தில் பேசிய போது தனக்கு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் பழக்கம் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அவர் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வந்தனர். மேலும் இது சம்பந்தமாக குழப்பம் நீடித்தது. அந்தக் குழப்பத்திற்கு கமல் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.