தமிழ்நாடு

''கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்'' -திஷா ரவி கைது குறித்து கமல்ஹாசன் ட்வீட்

webteam

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து டூல்கிட்டை பகிர்ந்த திஷா ரவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல். பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும். மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, உலக அளவில் கவனத்துக்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டு, 'டூல்கிட்' ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதைப் பகிர்ந்ததற்காக இப்போது பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டிருக்கிறார். திஷா மீது தேசத் துரோகம், வன்முறையைத் தூண்டிவிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெங்களூருவில் திஷா ரவியை கைது செய்த டெல்லி போலீஸ், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்றத்தில் உடைந்து திஷ உடைந்து அழுதார்.அதனைத்தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.