தமிழ்நாடு

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? - கமல்ஹாசன் கேள்வி

Sinekadhara

அம்மா உணவகங்களில் பணிநீக்கம் மற்றும் உணவுகளில் மாற்றம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், ‘’கொரோனாவுக்குப் பிறகு அம்மா உணவகங்களை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது. இதுபோன்ற உணவகங்களை அமைக்க சில மாநில அரசுகள் முயன்றுவருகின்றன. திமுக அரசும் ’அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணம் இல்லை’ என்று அறிவித்திருந்தது. ஆனால், சென்னையிலுள்ள அம்மா உணவகங்களில் இரவுநேர உணவுமுறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

இதற்கு, அம்மா உணவகம் நட்டத்தில் இயங்குவதே காரணம் என்கிறார்கள். சென்னை மாநகராட்சி தன் வருவாயைப் பெருக்கிக்கொள்ள பல வழிகள் இருக்கையில் சிறிய நட்டத்தைக் காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல. ‘அம்மா உணவகத் திட்டம், பெயர் மாற்றப்படாமலேயே சிறப்பாகத் தொடரும்’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், வரும் செய்திகள் அந்த உறுதிமொழிக்கு எதிரானதாக உள்ளன. ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்தத் திட்டத்தை, முந்தைய ஆட்சியாளர்களைவிட சிறப்பாகச் செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்கமுடியும்.

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாகச் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதிமய்யத்தின் சார்பாக தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.