கமல்ஹாசன் pt web
தமிழ்நாடு

RIP Vijayakanth | “அவரது நியாயமான கோபத்திற்கு ரசிகன் நான்” - மநீம தலைவர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

“விஜயகாந்தின் நியாயமான கோபத்திற்கு ரசிகன் நான்” என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் முதலில் சாலிகிராமத்தில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

இட நெருக்கடி காரணமாக சென்னை ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது உடலுக்கு நடிரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “ஆரம்பத்தில் நட்சத்திர அந்தஸ்து வரும்முன் எப்படி என்னுடன் பழகினாரோ அப்படித்தான் இத்தனை பெரிய நட்சத்திர அந்தஸ்து வந்த பின்னும் பழகினார். அவரிடம் எனக்கு பிடித்தது, அவரிடம் எந்த அளவு பணிவு இருக்கிறதோ அந்த அளவிற்கு நியாயமான கோபமும் இருக்கும். அந்த கோபத்தின் ரசிகன் நான். அதனால்தான் அவர் மக்கள் பணிக்கு வந்ததாக நான் நினைக்கிறேன். என்னை மாதிரியான ஆட்களுக்கு இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது ஒருவித தனிமைதான். நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு நான் செல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.