பெண்களுக்கு எதிரான வன்முறை - கமல்ஹாசன் web
தமிழ்நாடு

”பெண்களை பாதுகாக்க முடியாத சமூகம்; சாக்கடையே ஓடுது” - கமல்ஹாசன் ஆவேச பதிவு!

பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆவேசமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

Rishan Vengai

கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தமிழகம் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக அவர் கவலை தெரிவித்தார். சமூகத்தில் பெண்களை பாதுகாக்க முடியாத நிலைமை, நாகரீக சமுதாயமாக கருத முடியாதது என அவர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் பல கிலோமீட்டர் நடந்தே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

சமீப காலங்களில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே இருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியானதாக இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்தக் குற்றங்கள் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், அந்தவரிசையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளார்.

சாக்கடையே ஓடுது..

தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கமல்ஹாசன், “சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?

நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…

இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”

சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.

பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை” என ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான தொடர் குற்றங்கள் அதிகரித்து வருவது தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமா என்ற கேள்வியை எழச்செய்கிறது..