திமுக கூட்டணி குறித்து கமல்ஹாசன் pt
தமிழ்நாடு

டிவி மீது ரிமோட்டை எறிந்துவிட்டு திமுகவோடு கூட்டணி ஏன்? கமல் விளக்கம்!

டிவி மீது ரிமோட்டை எறிந்துவிட்டு திமுகவோடு கூட்டணி வைத்தது ஏன்? என்பதற்கான விளக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்..

Rishan Vengai

கமல்களும்கடந்த 2018-ம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையில் உருவாக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.. அப்போது, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் டிவியில் பேசும்போது ரிமோட்டை எறிந்து டிவியை உடைப்பது போல மநீம தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரது குரல்களும் கேட்கும். அந்தக் காணொளியில் அனைத்துக் கட்சிகளையும் கமல் விமர்சித்திருப்பார்.

டிவியை உடைத்த கமல்ஹாசன்

இந்தசூழலில் தற்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், கமல்ஹாசன் ரிமோட்டை கொண்டு டிவியை உடைத்தது அவ்வப்போது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்நிலையில் டிவி மீது ரிமோட்டை எறிந்துவிட்டு திமுகவோடு கூட்டணி வைத்தது ஏன்? என்பது குறித்து கமல் தற்போது விளக்கம் அளித்துள்ளார்..

டிவியை உடைத்துவிட்டு திமுக உடன் கூட்டணி ஏன்..?

கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு படத்திறப்பு விழா நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.. அதில் கலந்துகொண்டு படத்தினை திறந்து வைத்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், டிவியை உடைத்துவிட்டு ஏன் திமுக உடன் கூட்டணி வைத்தேன் என பேசியுள்ளார்..

அப்போது பேசிய அவர், ”அரசியல் கட்சி ஆரம்பிக்காமல், முதலில் தொண்டு பழகிக் கொண்டு பிறகு அரசியலில் வந்து மூத்தவர்களிடம் - மூத்த கட்சிகளிடம் அறிவுரை பெற்றுக் கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். மாற்று கருத்துகள் இருந்தே ஆக வேண்டும், அதன் பெயர்தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது நாம் கூடி நின்றாக வேண்டும்.

எதுக்காக நீங்க திமுகவில் போய் சேர்ந்தீர்கள். நீங்கதான் ரிமோட்டை எல்லாம் தூக்கிப்போட்டு உடைத்தீர்களே, ஏன் மறுபடியும் திமுகவிற்கு போனீர்கள் என்று கேட்டால்?, ரிமோட்டை தூக்கி போட்டேன் தான், அதான் சொன்னேனே விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்தில் உண்டு..

தூக்கிப்போட்டேன், ஆனால் ரிமோட்டை வேறு ஒரு ஆள் தூக்கிட்டு ஓடிட்டான்.. ஆகா அங்க போக கூடாதுயா ரிமோட்டு, ரிமோட் ஸ்டேட்டோடு இருக்க வேண்டும், இங்கு கல்வியே அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறோம், ரிமோட்டை கொடுத்து விடுவோமா?

எடுத்துட்டு வா திருப்பி, ரிமோட்டை ஒளித்து வைத்துக் கொள்வோம். ஒருத்தர் மீது ஒருத்தர் இனிமேல் அடித்துக் கொள்ள வேண்டாம். எவனாவது வந்து தூக்கி கொண்டு போய் விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்த அலையன்ஸ். இது புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள்” என பேசியுள்ளார்..