கள்ளழகர்
கள்ளழகர் pt desk
தமிழ்நாடு

கோவிந்தா கோஷமிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3வது நாள் நிகழ்வாக நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாார்.

கள்ளழகர்

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக் குதிரையில் எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில், கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்கக் குதிரையில் வந்தபோது வெள்ளிக் குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை, ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.

கள்ளழகர்

அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சக்கரை தீபம் ஏந்தியும் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களுக்கு மத்தியில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.