இருவர் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து - பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில், கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் எதிரே கார் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதில், படுகாயமடைந்த செந்தில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்து

அதேபோல் மற்றொரு விபத்தில் கள்ளக்குறிச்சி இடையர் சந்து பகுதியைச் சேர்ந்த மங்கை என்கின்ற ரஞ்சிதம் இன்று காலை தனது பேரக் குழந்தையை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் அவர் மீது டிப்பர் லாரி மோதியதில் ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்தில் உயிரிழந்த இருவரது உடலும் உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.