பெற்றோர் அதிர்ச்சி pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | பிரம்பால் அடித்த ஆசிரியர்.. சுருண்டு விழுந்த மாணவன்.. பெற்றோர் அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே பெரிய பகண்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் அடித்ததில் மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவன் பலத்த காயமடைந்த நிலையில், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

PT WEB

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பெரிய பகண்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ரியாஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் அன்பரசன் என்பவர் மாணவன் ரியாஸ் படிக்கவில்லை எனக் கூறி பிரம்பால் முதுகில் பலமாக அடித்துள்ளார்,

இதனால் குழந்தை சுருண்டு விழுந்து வலிப்பு ஏற்பட்டுள்ளது, இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அருகாமையில் உள்ள வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்யக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று கூறியதன் அடிப்படையில் அங்கிருந்து கலைந்து சென்றனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் அடித்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.