செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டிக்கு 14 மாடுகளின் தோள்களை கொண்டு மஞ்சுவிரட்டு போட்டிக்கான வடம் செய்யப்பட்டது.
இதையடுத்து கிராமத்தில் அமைந்துள்ள மைவேந்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மந்தவெளி பகுதியில் மஞ்சுவிரட்டுப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியை குதிரை சந்தால் மட்டுமின்றி காரனூர், குடிகாடு, நல்லாத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு ஆர்வமுடன் அடக்கினர். வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களின் பாதுகாப்பு நலன் குறித்து மாவட்ட நிர்வாகம் முன்னதாக உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.