வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் நாளை மறுநாள் (நவம்பர் 15-ஆம் தேதி) முற்பகலில் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் நிலவரம்:
நாகையில் இருந்து வடகிழக்கே 850 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்குத் திசை நோக்கி புயல் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக உருவெடுக்கும் என்றும், அதன் பிறகு வலுவிழந்து சாதாரண புயலாக கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக, புதுச்சேரி கடலோரங்களில் நாளை இரவு முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரத்துக்கு கூடுதலாக அலைகள் எழக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம்:
கஜா புயல் காரணமாக நாளை இரவு முதல் தஞ்சை, காரைக்கால், திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 80 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்வும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் சில இடங்களில் கனமுதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். புயல் காரணமாக வரும் 15 ஆம் தேதி வரை கடலுக்குச்செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை பெரிய பாதிப்பு இருக்காது என்றும் மழை இயல்பான அளவில் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கஜா புயல் கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்க உள்ள நிலையில், புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்களும் பல்வேறு துறை அதிகாரிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இதுவரை செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்து 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடலோர மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். 3 பேரிடர் மீட்பு குழுக்கள் நாகை மாவட்டத்திற்கும், 2 குழுக்கள் சிதம்பரத்திற்கும் விரைந்துள்ளன. மேலும் சென்னை, கடலூர், ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தலா ஒரு குழுவினரும் விரைந்துள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் பேரிடர் மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர்