கூட்டணி குறித்து கடம்பூர் ராஜூ பேச்சு web
தமிழ்நாடு

”இருக்கும் கூட்டணி கூட பிரியலாம்..” பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக கடம்பூர் ராஜூ பேச்சு!

தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இருக்கும் கூட்டணி கூட பிரியலாம் என கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இருக்கும் கூட்டணி கூட பிரியலாம் என கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முகவர்கள் கூட்டமானது தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியார்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இருக்கும் கூட்டணி கூட பிரியலாம்..

செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துத் தலைவர்களும் கூட்டணி கட்சிகளைப் பற்றி கவலைப்படுகின்ற மத்தியில், மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்திற்கு வந்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே. ஜூலை 7-ம் தேதி தொடங்கி 154ஆவது நாளாக நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். மக்கள் மீது உள்ள நம்பிக்கை அதிமுக கழகத்திற்கு மட்டுமே உள்ளது.

கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமையும், இன்னும் காலம் இருக்கின்றது. கடைசி நேரத்தில் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரலாம், இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம்.

திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் இடையே 2வது இடத்தை பிடிப்பது யார்? எதிர்க்கட்சியாக யார் வருவார்கள் என்று தான் போட்டி  உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி தான் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

டிடிவி தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 4 ஆண்டு காலம் நல்ல ஆட்சியை கொடுத்த பழனிச்சாமியை மக்கள் முதல்வராக முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால்தான் தெரியும் என்பது போல அதிமுக ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய துவங்கி உள்ளனர். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும் என்று பேசியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை திமுகவின் தவறை சுட்டிக்காட்டவில்லை. காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை, கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வபெருந்தகைக்கு அதிமுக பற்றி பேச அருகதை இல்லை.

காங்கிரஸ் கட்சியை திமுக விழுங்க பார்க்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை திமுகவில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும் என்று பேசினார்.