தமிழ்நாடு

அமித்ஷா சொன்னதில் தவறில்லை : கடம்பூர் ராஜூ

webteam

அமித்ஷா சொன்னதில் தவறில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும்  என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவரது ட்விட்டரில், “இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும், இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமித்ஷா சொன்னதில் தவறில்லை, ஆனால் தமிழ்நாட்டில் அண்ணா சொன்னதுபோல் இருமொழிக்கொள்கையே இருக்கும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழை மையமாக வைத்து தமிழுக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையிலும், தமிழை பாதுகாக்கும் வகையிலும் அரசு செயல்படும்” எனத் தெரிவித்தார்.