தமிழ்நாடு

காணி பழங்குடியினரின் வாழ்வியல் அங்காடி திறப்பு - சிறப்பு என்ன?

PT WEB

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக காணி பழங்குடியின மக்களின் வாழ்வியல் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் அங்காடி என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? 

கண்களைக் கவரும் வண்ண விளக்குகளுக்கு மத்தியில், மனதைக் கவரும் விதமாக காட்சியளிக்கிறது, மேற்கு தொடர்ச்சி மலையில் விளைந்த இயற்கை உணவுப் பொருட்கள். அதுதான். காணி பழங்குடியினரின் வாழ்வியல் அங்காடி. நெல்லையின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மயிலார் பகுதியில் வாழும் காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக, இப்படி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

பாளையங்கோட்டை தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரே உள்ள காதி கிராஃப்ட் கட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இக்கடையில்தான், காணி பழங்குடியின மக்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்களும், அவர்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்திவரும் உணவுப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

காணி பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை பாளையங்கோட்டை மகாராஜாநகர் உழவர் சந்தையில் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்துதந்தார், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் பலனாக மேலும் ஒரு புதிய கடையை அவர் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

கடந்த காலங்களைப் போல் இல்லாமல், இனி தங்களின் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்கும் என காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.செயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுவதால், காணி பழங்குடியினரின் உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. சிறிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இத்தொழில் நாளடைவில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.