தூத்துக்குடியில் காலா திரைப்படம் வெளியான திரையரங்கில் மவுன அஞ்சலி செலுத்திய பின் படம் திரையிடப்பட்டது.
கடந்த 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு அசாதாரண சூழல் நிலவிய சூழலில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கத்தில் காலா திரைப்படத்தைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்போது ரஜினி மன்றத்தை சேர்ந்த சிலர், திரைக்கு முன் வந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி படம் பார்க்க வந்த ரசிகர்கள் எழுந்து நின்று சிறிது நேரம் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.