சீமான் - பெரியார் - வீரமணி web
தமிழ்நாடு

"கீழிறங்கி பேச விரும்பவில்லை" - பெரியார் குறித்த சீமான் கருத்துக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

பெரியார் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் சீமானுக்கு எதிராக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

PT WEB

பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தொடர் விமர்சனங்களை  திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார். பெரியாரும் பிரபாகரனும் எதிர்த் துருவங்கள் அல்ல எனக்கூறி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு கடும் கண்டனம்..

தந்தை பெரியார் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.  சீமானின் பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில்,  சீமானின் பேச்சை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கடுமையாக கண்டித்துள்ளார்.

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த வீரமணி, மக்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் பதிலளித்த தாங்கள் கீழிறங்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

சீமான் - பெரியார்

இதற்கிடையில் பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிர் துருவங்களில் நிறுத்தி பொய் பிம்பத்தை ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சீமானின் அணுகுமுறை தமிழீழ மக்களுக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்க கூடியது என்றும் தெரிவித்துள்ளார். நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் பிரபாகரனை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் என்றும்
உருத்திகுமாரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மாவீரர் தின உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் பேட்டிகளிலும் பிரபாகரன் தெரிவித்த கருத்துகள் மட்டுமே அவரது அதிகாரப்பூர்வ கருத்தாக கருதப்படும் என்றும் ருத்திரகுமாரன் கூறியுள்ளார். இதனிடையே இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், பெரியார் துண்டறிக்கை விநியோகித்தபோது நேரிட்ட மோதல் தொடர்பாக தபெதிக மற்றும் நாதகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.