மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அரசியல் நாகரீகமற்றவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சிதான் என வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என்று கூறினால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கிற பாஜகவின் சதி திட்டத்திற்கு வைகோ துணை போகலாமா?. வைகோவின் பாரதிய ஜனதாவா, காங்கிரஸ் கட்சியா?. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரஸையே வைகோ விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது. அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ. நரேந்திர மோடி, சுப்ரமணியன் சுவாமியை சந்தித்த வைகோ மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளார்.
உலகின் அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு நேரு சேர்த்ததை வைகோ துரோகம் என்கிறாரா? 2016இல் ஜெயலலிதாவை வீழ்த்த திமுக வலிமையான கூட்டணி அமைத்தபோது, அதற்கு எதிராக சதி செய்தவர் வைகோ. வைகோவின் அரசியல் பாதையை உற்று கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இல்லை என்பதை அறிவர்” எனத் தெரிவித்துள்ளார்.