தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

webteam

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் திங்கட்கிழமை காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்பாக உறுதிமொழி அல்லது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கு.பிச்சாண்டி, 4 முறை திருவண்ணாமலை தொகுதியிலும், 2 முறை கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியிலும் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றபின், வரும் 11 ஆம்தேதி சட்டப்பேரவை கூடும்போது, புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

முன்னதாக, தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் 15 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பதினாறவது சட்டமன்ற பேரவையில் முதல் கூட்டத்தொடர் 2021- ஆம் ஆண்டு மே திங்கள் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெறும் என்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பேரவைத்தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் மே 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாளை காலை 11.30 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் கூட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் இதர பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.