போரூர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகனுக்கு பாராட்டுகள் குவிகிறது.
சமூக வலைத்தளங்களில் பலர் அவரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலை நாட்டியிருப்பதோடு,
முடிந்தவரை விரைந்து இந்த வழக்கை விசாரித்து முடித்திருக்கிறார் என புகழ்ந்திருக்கின்றனர் சமூக வலைத்தள வாசிகள்.
இந்த வழக்கு ஆரம்பித்த நாள் முதல், நீதிமன்றத்துக்கு எந்த காலதாமதமும் இல்லாமல்வந்திருக்கிறார் நீதிபதி வேல்முருகன்.
முடிந்தவரை வாய்தா கொடுக்காமல் வழக்கு விசாரனையை நடத்தியிருக்கிறார். அனைத்து தரப்புக்கும் உரிய கால அவகாசம் வழங்கி,
விசாரித்திருக்கிறார். வழக்கு நடைபெற்ற சமயத்தில், தஷ்வந்துக்கு ஜாமின் கிடைத்தது. ஆனால், தஷ்வந்த் தனது தாயையே கொலை
செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் மட்டும், தொடர்ந்து வழக்கு விசாரணையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. நேரடி விசாரணை செய்ய
முடியாவிட்டாலும், வேறு எந்த வகையில் இதில் வாதிட்டு தங்கள் தரப்பு நியாயங்களை நிரூபிக்க முடியும் என பாருங்கள் என
அறிவுரை கூறியுள்ளார். குறிப்பாக ஹாசினி தரப்பு வாதம் வைக்கும் போதெல்லாம், நேரடி சாட்சியங்கள் இல்லாதாதால், அறிவியல்
பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், டி,என்,ஏ பரிசோதனை, தடயவியல் ஆய்வுகள், சிசிடிவி பதிவுகள் என அனைத்தையும் கேட்டுப்பெற்று, வழக்கில்
விசாரணையை மேற்கொண்டிருக்கிறார் நீதிபதி வேல்முருகன். அப்படி விசாரித்த வழக்கில் இன்று 12 மணிக்கு தீர்ப்பு தருவதாக
கூறியிருந்த நீதிபதி காலை 10 மணிக்கெல்லாம் நீதிமன்றம் வந்ததோடு, இதர வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். 11.40
மணிக்கெல்லாம் ஹாசினி தொடர்பான வழக்கின் விசாரணையை தொடங்கி, கடைசி கட்ட விசாரணையை மேற்கொண்டார். குற்றவாளி
என்று அறிவித்துவிட்டு, தண்டனை விபரத்தை ஒரு மணி நேரம் தள்ளிப் போட்டார்.
எல்லாருக்கும் என்ன தண்டனை கொடுக்கப் போகிறார் என்ற ஆர்வமும் அதிகமாகியது. நீதிமன்ற அறைக்கு வந்த நீதிபதி வேல்முருகன்,
ஒவ்வொரு பிரிவாக கூறி அதற்கான தண்டனையை விளக்கினார். கடைசியில் அரிதினும் அரிதான வழக்காக இதனை பார்த்து,
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுத்தார். நீதிமன்றத்தில் இருந்த ஒட்டுமொத்த கூட்டமும் “நீதிபதி வேல்முருகன் வாழ்க, நீதிபதி
வேல்முருகன் வாழ்க! என கோஷம் போடத் தொடங்கினர்.