தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு

webteam

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுக்கொண்டார்

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்திருந்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இதையடுத்து நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில், சஞ்ஜிப் பானர்ஜிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த 31ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதில் சஞ்ஜிப் பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். 1961-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் பிறந்த சஞ்ஜிப் பானர்ஜி கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஜார்க்கண்ட், அலகாபாத் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர் ஆவார். 2006ஆம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார்.