தமிழ்நாடு

“ஜாக்டோ ஜியோ பிரச்னைக்கு தீர்வு காண்பதே குறிக்கோள்” - நீதிபதி கிருபாகரன்

“ஜாக்டோ ஜியோ பிரச்னைக்கு தீர்வு காண்பதே குறிக்கோள்” - நீதிபதி கிருபாகரன்

webteam

ஜாக்டோ ஜியோ, ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதே நீதிமன்றத்தின் குறிக்கோள் என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய தமிழக அரசின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என ஜாக்டோ ஜியோ, ஆசிரியர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் பேச வேண்டும் எனவும் தெரிவித்தது.

இதற்கு முதலமைச்சரை சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 90 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் 10 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. ஆசிரியர்கள் போராட்டம் ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஆண்டுக்கணக்கில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் கோரிக்கைக்காகவே போராட்டம் நடத்தப்படுவதாகவும் தற்போது தீர்வு காணமால் பணிக்கு திரும்ப முடியாது எனவும் ஜாக்டோ ஜியோ, ஆசிரியர்கள் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், இருதரப்பு வேண்டுகோளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை வழங்கினார். மேலும் நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோரும் போராட்டத்தில் இறங்குவது அரசை பயமுறுத்தவா என கேள்வி எழுப்பினார். ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் தற்போது உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என குறிப்பிட்டார். பிரச்னைக்கு தீர்வு காண்பதே நீதிமன்றத்தின் குறிக்கோள் எனவும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவே வேண்டுகோள் வைக்கிறேன் எனவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.