தமிழ்நாடு

‘இனியொரு தற்கொலை நடக்கக் கூடாது’ - ஐஐடி மாணவர்கள் இருவர் உண்ணாவிரதம்!

‘இனியொரு தற்கொலை நடக்கக் கூடாது’ - ஐஐடி மாணவர்கள் இருவர் உண்ணாவிரதம்!

webteam

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி கடந்த வாரம் தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தந்தை லத்தீஃப் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் பாத்திமாவின் உயிரிழப்புக்கு நீதி வேண்டி ஐஐடியைச் சேர்ந்த இரு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசார் மொய்தீன், ஜஸ்டின் ஜோசப் என்ற இரு மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் மாணவர்களின் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து நியூஸ் மினிட்டுக்கு பேசிய அசார், ‘வளாகத்தில் தற்கொலைகளுக்கு வழிவகுத்த கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்தும், நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை எதிர்த்தும் மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை போராட்டம் நடத்தினோம். எங்களது கோரிக்கைகளை இயக்குநரிடம் சமர்பித்தோம். பாத்திமா இறப்பில் முழு விசாரணை தேவை’ என தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிந்தா பார் (Chinta Bar) என்ற ஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு, “சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மனதளவில் உளச்சலில் உள்ளனர். எங்களதுப் போராட்டம் பாத்திமாவின் இறப்புக்கு நீதி வேண்டி மட்டுமல்ல. இந்த போராட்டம் எல்லாருக்குமானது. நாளுக்கு நாள் சென்னை ஐஐடியில் தற்கொலை அதிகரித்தே வருகிறது. இனி ஒரு தற்கொலை இங்கு நடக்கக்கூடாது” என குறிப்பிட்டுள்ளது.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலித்தது. திமுக எம்பி கனிமொழி, கொல்லம் எம்பி பிரேம்சந்திரன் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து பேசினர். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.