minister senthilbalaji case pt desk
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் - தலைமை நீதிபதி அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கு, மூன்றாவது நீதிபதியாக, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்

webteam

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டுமென அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, நேற்று (ஜூலை 4) தீர்ப்பு வழங்கியது.

senthil balaji, ed, madras high court

அப்போது நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமெனவும்; நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர். இருவேறு மாறுபட்ட தீர்ப்பு காரணமாக, வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து முடிவெடுக்க இந்த வழக்கு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றமும், விரைந்து மூன்றாவது நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டது. இந்நிலையில், நீதிபதி சி.வி.கார்த்திகேயனை மூன்றாவது நீதிபதியாக நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா அறிவித்துள்ளார்.